முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிம், யோகா எது நல்லது?

ஜிம்மில் உடலுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள்.

யோகாவில் உடலுக்கும், மனதிற்கும், புத்திக்கும், உயிருக்கும், ஆன்மாவுக்கும், மூச்சுக்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.

இளம் வயதில் அதிகமாக ஜிம்மில் பயிற்சி செய்தவர்கள், வயதான பிறகு, உடல்நடுக்கம், உடலில் சோர்வு, வயதான தோற்றம் ஏற்படுகிறது.

இளம் வயதில் அதிகமாக யோகா செய்தவர்களுக்கு வயதான பிறகு, உடல் ஆரோக்கியம், தெம்பு, இளமையான தோற்றம் ஏற்படுகிறது.

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால்,
உடலில் எப்பொழுது அசைவு ஏற்படுத்துகிறோமோ அப்பொழுது அசைவு ஏற்படும் இடத்தில் மனதை வைத்து மூச்சை கவனித்தால் உடலுக்கு நல்லது.

உடலில் எப்பொழுது அசைவுகள் ஏற்படுகிறதோ அப்பொழுது மூச்சையும், மனதையும் கவனிக்காமல் இருந்தால் உடலுக்கு கெட்டது.

ஜிம் பயிற்சிகள் செய்யும் பொழுது மூச்சை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுவாக கற்றுக் கொடுப்பதில்லை. மேலும் மிகவும் வேகமாக செய்கிறார்கள். மேலும் ஓய்வு எடுப்பதில்லை.

ஆனால் யோகா செய்யும் பொழுது மெதுவாக செய்வார்கள், ஒவ்வொரு பயிற்சிகளும் மூச்சு எந்த இடத்தில் இழுக்க வேண்டும், எந்த இடத்தில் விட வேண்டும், எந்த இடத்தில் அடக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பார்கள். மேலும் மனதை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுப்பார்கள்.

எனவே ஜிம்மை விட யோகா மிக மிக சிறந்தது.

பலுதூக்கும் போட்டி, ஆணழகன் போட்டி என்று சில போட்டிகளுக்கு மட்டுமே ஜிம் பயிற்சி தேவைப்படும். ஆரோக்கியத்திற்கு கண்டிப்பாக ஜிம் பயிற்சி உதவாது. உடல் ஆரோக்கியத்திற்கு யோகா தான் சிறந்தது.

போட்டி என்பது வேறு, ஆரோக்கியம் என்பது வேறு.

இருந்தாலும் நான் சொல்வதுபோல சில மாற்றங்களை ஜிம்மில் ஏற்படுத்தினால் ஜிம் பயிற்சியிலும் ஆரோக்கியம் கிடைக்கும்.

இனிமேல் ஜிம்மில் பயிற்சி செய்யும் பொழுது

1. அதிவேகமாக பயிற்சிகள் செய்யக் கூடாது.
2. எந்தப் பயிற்சியை செய்தாலும் மூச்சுக் காற்று உள்ளே செல்வதையும் வெளியே செல்வதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே செய்ய வேண்டும்.
3. தொடர்ந்து பயிற்சிகள் செய்யக் கூடாது ஓய்வு எடுத்து ஓய்வு எடுத்து செய்ய வேண்டும்.
4.அனைத்து ஜிம் பயிற்சிகளும் முடிந்த பிறகு சவாசனம் என்ற ஒரு பயிற்சியை கண்டிப்பாக 15 நிமிடம் செய்ய வேண்டும்.

சவாசனத்தில் சிறப்பு என்னவென்றால், நாம் பயிற்சிகள் செய்யும் பொழுது ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து உடலை மனதை மூச்சை ஒழுங்குபடுத்தி ஓய்வெடுத்து நம்மை சரி செய்யும் ஒரு அற்புதமான பயிற்சி.

ஜிம்மில் பல மணி நேரம் பயிற்சி செய்த ஒருவர் சவாசனம் செய்யாமல் அதாவது ஓய்வெடுக்காமல் அடுத்த வேலையைச் செய்யும் பொழுது அந்த டென்ஷன் அன்று முழுவதும் அவருக்கு இருக்கிறது. இதுவே உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு அடிப்படை காரணம்.

எனவே கடுமையான பயிற்சிகள் எது செய்தாலும் கடைசியாக சவாசனம் செய்து முடிப்பது சிறப்பு.

சவாசனம் எப்படி செய்வது?

ஒரு விரிப்பில் தளர்வாக படுத்துக்கொள்ள வேண்டும். கால்களை ஒரு அடி அல்லது இரு அடி அகலமாக வைத்துக் கொள்ளவேண்டும். கைகளை, உள்ளங்கை வானத்தைப் பார்த்த மாதிரி தொடையில் இருந்து ஒரு அடி தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். உடலை நேராக வைத்துக் கொள்ளவேண்டும். கண்களை மூடி படுத்து இருக்க வேண்டும்.

இப்படி படுத்துக்கொண்டு உள்ளங்கால் முதல் உச்சி வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் நம் மனதால் ஓய்வு எடு என்று சொல்லி ஓய்வெடுக்க செய்ய வேண்டும்.

உதாரணமாக கால் விரல்கள், உள்ளங்கால், கணுக்கால், கெண்டைக்கால், கால் மூட்டு, தொடைகள், இடுப்பு பகுதி, அடிவயிறு, வயிற்றுப்பகுதி, நெஞ்சுப் பகுதி, இருதயம், நுரையீரல், தோல் இணைப்பு, புஜங்கள், கை மூட்டு,முன்னங்கை, உள்ளங்கை, கை மணிக்கட்டு, விரல்கள், தொண்டை, தாடை, உதடுகள், கன்னங்கள், மூக்கு, கண், காது, புருவங்கள், நெற்றி பகுதி, முன் தலை பகுதி, உச்சந்தலை, பின் தலைப் பகுதி, கழுத்து முதுகுப் பகுதி முழுவதும்.

இப்படி ஒவ்வொரு உறுப்பாக நினைத்து அந்த உறுப்பை ஓய்வெடுக்கச் சொல்லும் பொழுது நமது மனதை அந்த இடத்தில் கொண்டு சென்றால், 15 நிமிடத்தில் நமது உடல் களைப்பு நீங்கி சக்தி பெருகும்.

நான் 15 நிமிடம் சவாசனம் பயிற்சி பேசிய ஆடியோவை டெலிகிராமில் பதிவு செய்கிறேன். இனிமேல் ஓய்வெடுக்கும் பொழுது இந்த ஆடியோவை பயன்படுத்தி சவாசனம் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.

சவாசனம் நாமாக, தானாக செய்வதைவிட மற்றவர் சொல்லும் பொழுது கவனித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் நாமாக ஒவ்வொரு உறுப்பை நினைக்கும் பொழுது அதற்கு நமது புத்தியை பயன்படுத்த வேண்டியது உள்ளது. மற்றவர் சொல்லும் பொழுது கவனித்தால் நமது புத்தியை பயன்படுத்த வேண்டியதில்லை. எனவே அந்த நேரத்தில் புத்தியும் ஓய்வு எடுத்துவிடும்.

சவாசனம் செய்வோம், சாந்தமாக வாழ்வோம்.

கருத்துகள்

Advertisement